தேனி:
தேனி யூகோ வங்கியின் கிளை மேலாளராக இருப்பவர் கவுரி சங்கர். கடந்த 31.1.2018-ந் தேதி இவர் பணியில் இருந்த போது தேனி வ.உ.சி. தெரு பழைய ஜி.எச். ரோடு பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி கற்பக செல்வி (வயது49) புதிய கணக்கு ஒன்றை வங்கியில் ஆரம்பித்தார். அதன் பிறகு தனது நகையை அடகு வைக்க வேண்டும் என்று சொல்லி 80 கிராம் எடையுள்ள 8 வளையல்களை கொடுத்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கடன் பெற்றார்.
அதன் பிறகு 1 வருடம் ஆகியும் அதற்கு வட்டி கட்டவில்லை. இதனையடுத்து நகையினை மீட்க கற்பக செல்விக்கு வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த முகவரியில் அவர் இல்லை என தெரிய வரவே கடிதம் திரும்பி வந்தது.
அதன் பிறகு நகை மதிப்பீட்டாளர் நாகராஜன் என்பவர் ஏலம் விடுவதற்காக கற்பக செல்வி வைத்த நகைகளை பரிசோதனை செய்தார். அதில் போலி நகைகளை அடகு வைத்து வங்கிக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 836 நஷ்டத்தை ஏற்படுத்தியது தெரிய வரவே இது குறித்து கவுரி சங்கர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.
எஸ்.பி. உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலெட்சுமி வழக்கு பதிவு செய்து மாயமான கற்பக செல்வியை தேடி வருகிறார். இவர் ஏற்கனவே பல்வேறு வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.