செய்திகள்

தேனி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை

தேனி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

தேனி:

தேனி அருகே அல்லிநகரம் ஒண்டி வீரன் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 29). இவருக்கும் துர்கா தேவி (27) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 32 பவுன் நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது பாலகிருஷ்ணன், அவரது தாயார் மற்றும் உறவினர்கள் தூண்டுதலின் படி துர்கா தேவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்துள்ளார்.

மேலும் 10 பவுன் நகை வாங்கி வர வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டால்தான் திருமணத்தின் போது கொடுத்த நகைகளை திருப்பி தருவேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த துர்காதேவி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.

எஸ்.பி. உத்தரவின் பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் பாலகிருஷ்ணன், அவரது தாயார் மற்றும் உறவினர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.