செய்திகள்

ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி தீவிரம்

தேனி குரங்கணி மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் நுரை கலந்த நீரை தெளித்து தீயை அணைக்க முயற்சி நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #TheniFire #TheniForestFire

தேனி:

தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலைப்பகுதியில் நேற்று மாலை காட்டுத்தீ பற்றிக்கொண்டது. இதில், மலையேற்ற பயிற்சிக்கு சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் சிக்கிக்கொண்டனர். இதனை அடுத்து, வனத்துறையினர், உள்ளூர் மக்கள் உதவியுடன் அவர்களை மீட்கும் பணி நடந்தது.

தற்போது வரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீக்காயங்களுடன் அவர்கள் தேனி, மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 மாணவியர், 3 மாணவர்கள் இந்த விபத்தில் பலியாகியிருக்கலாம் என மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தீயை அணைக்கும் பணியில் சூளூர் விமானப்படையிலிருந்து வந்திருந்த ஹெலிகாப்டர் ஈடுபட்டுள்ளன. நுரை கலந்த தண்ணீரை பீச்சி தீயை அணைக்க முயற்சி நடந்து வருகிறது. தாழ்வாக பறந்து பாறைகளில் சிக்கியுள்ளவர்களை கண்டறிந்து மீட்கும் பணியும் நடந்து வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவிக்கின்றனர். 

இதற்கிடையே, போடி மலை அடிவாரப்பகுதியில் தற்காலிகமாக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். #TheniFire #TheniForestFire

SCROLL FOR NEXT