தேனி:
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் இன்று 25 கல்லூரி மாணவிகள் மடை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட 25 மாணவிகளும் இதில் சிக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வேண்டுகோளை ஏற்று காட்டுத்தீயில் மாணவிகள் சிக்கிய பகுதிக்கு இந்திய விமானப்படை விமானம் செல்ல மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார். இதையடுத்து கோவையில் இருந்து ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணிகளுக்காக விரைந்துள்ளன.
இதுவரையில் 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அருகே உள்ள தேயிலை தோட்டத்திலிருந்தும் தனியார் உதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிர்மலா சீதாராமன் பதிவு செய்துள்ள டுவிட்டில் கூறியிருப்பதாவது:-
தேனி மாவட்ட ஆட்சியாளருடன் சற்று முன் தொலைபேசி மூலம் பேசினேன். 10-15 மாணவர்கள் மலையிலின் அடிவாரத்திற்கு இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தீயணைப்பு படை மற்றும் வனத்துறை அதிகாரிகளும் தீவிர முயற்சி எடுத்துவருகின்றனர்.
அருகே உள்ள தேயிலை தோட்டத்திலிருந்தும் தனியார் உதவி அளிக்கின்றனர். மாவட்ட ஆட்சியாளர் டாக்டர்களையும் அனுப்பியிருந்தாக தெரிவித்தார். @IAF_MCC சூலூரிலிருந்து helicopter களை அனுப்புகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தீக்காயம் அடைந்த மாணவிகள் டோலி மூலம் கீழே கொண்டு வரப்படுகின்றனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மலை அடிவாரத்தில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. #TheniForestFire #குரங்கணிதீ