தீ விபத்து நடந்த இடத்தில் கல் நட்டு அஞ்சலி செலுத்தும் கிராம மக்கள். 
செய்திகள்

குரங்கணி தீ விபத்து நடந்த இடத்தில் கல் நட்டு அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்

குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி பலியானவர்களுக்கு கிராம மக்கள் கல் நட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கடந்த 10-ந் தேதி சென்னை, கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மலை யேறும் பயிற்சி குழுவினர் 36 பேர் சென்றனர்.

அப்போது ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி 21 பேர் பலியாகினர். மேலும் சிலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மலையேறும் பயிற்சிக்கு சென்றவர்கள் முதல்நாள் கொலுக்கு மலை பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் தங்கினர்.

மறுநாள் ஒத்தமரம் பள்ளத்தாக்கு பகுதியில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு கீழே இறங்கும்போது காட்டு தீயில் சிக்கினர். இதில் 10 பேர் மட்டும் உயிர் தப்பி வந்தனர். ஒருசிலர் பாறை இடுக்குகளில் ஒளிந்து தப்ப முயன்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே 9 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பின்பு மதுரை, கோவை, ஈரோடு, சென்னை, தேனி ஆகிய இடங்களில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொலுக்கு மலை தேயிலை திட்ட தொழிலாளர்கள் மற்றும் மலைகிராம வாலிபர்கள் பலரை மீட்க முயன்றனர். ஆனால் அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதால் அங்கு கல் நட்டு அஞ்சலி செலுத்த திட்டமிட்டனர்.

அதன்படி மலை தோட்ட தொழிலாளர்கள், கிராம மக்கள் கொலுக்கு மலையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள பாறை இடுக்கு பகுதியில் உடல்கள் மீட்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், மலையேறும் குழுவினர் அடிக்கடி இப்பகுதியில் உள்ள தோட்டங்களில் தங்கு வார்கள். அவர்களுக்கு உணவு சமைத்து கொடுப்போம். குடும்பத்தினர் போல் பழகியதால் அவர்களது இழப்பை தாங்க முடியவில்லை.

எனவே இறந்து 16-ம் நாள் நினைவாக உடல்கள் மீட்கப்பட்ட இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி உள்ளோம் என்றனர்.  #tamilnews

SCROLL FOR NEXT