செய்திகள்

தேனி மாவட்டத்தில் தரமற்ற உணவு பொருட்களை விற்றால் சிறை தண்டனை

தேனி மாவட்டத்தில் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்வோருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி:

தேனி மாவட்டத்தில் உள்ள உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வோர் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்ட விதிகளின்படி உணவு பொருட்கள் தயாரிப்பவர்கள் மற்றும் வணிகர்கள் அரசு பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு பதிவு சான்றோ அல்லது உரிமமோ பெறாத உணவு தயாரிப்பு நிறுவனம் மற்றும் விற்பனை இடங்கள் கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டத்தின்படி அதிகபட்சமாக 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதுபோல உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006 முத்திரையுடன் உணவு பாதுகாப்பு உரிமம் எண் முத்திரையிடாத உணவு பொட்டலங்களை வணிகர்கள் தயாரிப்பதோ, விற்பனை செய்வதோ கூடாது.

முத்திரையிடாத உணவு பொருட்களை பொதுமக்கள் வாங்கி உபயோகப்படுத்துவதை தவிர்த்திட வேண்டும். பாட்டில் மற்றும் கேன்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீரில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் மற்றும் ஐ.எஸ்.ஐ. முத்திரை உள்ளதா என கண்டறிந்து பயன்படுத்திட வேண்டும்.

இதில் குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் உணவு தரம் குறித்த புகார்களை 94440 42323 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப்வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார். #tamilnews