செய்திகள்

பொதுக்குழுவில் பங்கேற்பதை தடுக்க தேனி மாவட்ட தினகரன் ஆதரவு நிர்வாகிகள் கடத்தலா?

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் தினகரன் ஆதரவு நிர்வாகிகள் கேரளாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதன்முறையாக அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த டிசம்பர் 29-ந்தேதி கூடியது.

இக்கூட்டத்தில் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஏராளமான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் விலகினர். கட்சி இரண்டாக உடைந்து அ.தி.மு.க. அம்மா அணி, அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி என பிளவுபட்டது.

அதன்பின்னர் சசிகலா சிறை செல்லவே எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்-அமைச்சரானார். டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியில் துணை பொதுச்செயலாளரானார். அதன்பிறகு அவர் கட்சி நிர்வாகிகள் சிலரை விலக்கியும், சேர்த்தும் உத்தரவிட்டார்.

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை நீக்க தினகரனுக்கு உரிமை இல்லை என ஏராளமானோர் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து தினகரனை கட்சியில் இருந்து விலக்கி வைக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார். அவருக்கு ஆதரவாக அமைச்சர்களும் 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் கை கோர்த்தனர்.


இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சி அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் 110 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். கட்சியில் தனது செல்வாக்கை நிலைநாட்டவும், அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவையும் விலக்கி வைக்கும்பொருட்டு வரும் 12-ந்தேதி பொதுக் குழு மற்றும் செயற்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுக்க பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தினகரன் ஆதரவாளர்கள் கடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 52 பேர் உள்ளனர். இதில் தினரகனுக்கு ஆதரவு நிலையில் இருந்த சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தினகரன் அணியில் இருந்து எம்.எல்.ஏ. உள்பட கட்சி நிர்வாகிகள் எடப்பாடி அணிக்கு சென்றுவிடாமல் தடுக்க அவர்களை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலபேர் கேரளாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தேனி மாவட்ட தினகரன் ஆதரவு நிலையிலான செயற்குழு, பொதுக்குழு நிர்வாகிகளும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.