வையம்பட்டி:
திருச்சி மாவட்டம், வளநாடு அருகே பாலக்குறிச்சியில் இரும்பு கடை வைத்து நடத்தி வருபவர் வெள்ளைச்சாமி (வயது 47). இவர் கடந்த 2-ந்தேதி வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் ஆஸ்பெட்டாஸ் கழற்றப்பட்டு கிடந்தது.
இதையடுத்து கடைக்குள் உள்ளே சென்று பார்த்த போது, கடையில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான 3½ டன் இரும்பு கம்பிகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளைச்சாமி அக்கம் பக்கத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களிலும் மர்மநபர்களை தேடி வந்தார்.
ஆனால் மர்ம நபர்கள் யார் என்று தெரியவில்லை. பின்னர் இதுதொடர்பாக வளநாடு போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கம்பிகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
3½ டன் எடையுள்ள கம்பிகள் என்பதால் அவற்றை ஏதாவது ஒரு வாகனத்தில் வைத்து தான் கொண்டு செல்ல முடியும் என்ற நிலையில் இதுதொடர்பாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.