செய்திகள்

திருபுவனை அருகே நடந்த சோகம்: 3 மாதங்களுக்கு முன் தப்பியநிலையில் அதே பாம்பு கடித்து பெண் பலி

திருபுவனை அருகே 3 மாதங்களுக்கு முன் தப்பியநிலையில் அதே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

திருபுவனை:

திருபுவனை அருகே கொத்தபுரிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயி. இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்கள் புதிதாக வீடு கட்ட முடிவு செய்தனர். கட்டுமானப் பணிக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணன் கருங்கற்களை விலைக்கு வாங்கினார். லாரியில் ஏற்றப்பட்ட இந்த கருங்கற்களை வீடு கட்ட திட்டமிட்டு இருந்த இடத்தில் கிருஷ்ணனும், மாரியம்மாளும் இறக்கினர்.

அப்போது அந்த கல் குவியலோடு ஒரு விஷப்பாம்பும் இருந்துள்ளது. கற்களை இறக்கியபோது அந்த பாம்பு திடீரென சீறியது. இதைப்பார்த்து மாரியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்தவர்கள் பாம்பை அடிக்க விரட்டியபோது அங்கிருந்து தப்பி கற்குவியலுக்குள் புகுந்தது. இதன்பின் பாம்பை அவர்கள் மறந்தேபோய் விட்டார்கள்.

இந்தநிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு வீடு கட்டும் வேலை தொடங்கியது. அப்போது அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்த கற்களை மாரியம்மாள் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு கல்லுக்கு அடியில் பதுங்கி இருந்த பாம்பு அவரை கடித்தது. கல் ஏற்றிய லாரியில் வந்து விரட்டப்பட்ட அதே பாம்பு தான் மாரியம்மாளை கடித்து இருப்பது தெரியவந்தது. இதனால் மாரியம்மாள் அலறி துடித்தார். உடனே அவரை திருபுவனையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாரியம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகின்றனர். 3 மாதங்களுக்கு முன் தப்பிய நிலையில் அதே பாம்பு கடித்து பெண் இறந்து போன சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.