புளியரை எஸ் வளைவு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள மீன் கழிவுகள் ஏற்றி வந்த லாரி 
செய்திகள்

செங்கோட்டை அருகே மீன் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை கேரளாவிற்கு திருப்பி அனுப்பிய போலீசார்

செங்கோட்டை அருகே கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை போலீசார் திருப்பி அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கோட்டை:

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு லாரிகள் மூலம் கழிவுகள் ஏற்றப்பட்டு வந்து கொட்டப்படுவது வழக்கமாகிவிட்டது. இதற்காக தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் லாரிகள் இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்து தமிழகத்தில் கொட்டி விடுகின்றனர். இதனால் தமிழகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மீன் கழிவுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியில் பயங்கர துர்நாற்றம் வீசியது. லாரி சோதனை சாவடி அருகே வந்தபோது அதனை மடக்கி சோதனை செய்த போலீசார் அதில் மீன் கழிவு இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் லாரியை திரும்பவும் கேரளாவிற்கு திருப்பி அனுப்பினர்.

ஆனால் லாரி டிரைவர் சோதனை சாவடியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள எஸ் வளைவு அருகே லாரியை நிறுத்திவிட்டு சென்று விட்டார். இதனால் அப்பகுதியில் சென்றவர்கள் மூக்கை பிடித்தபடி சென்றுள்ளனர். இதையறிந்த போலீசார் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் லாரியின் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT