அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பிரசாந்த் கிஷோர். 
செய்திகள்

கெஜ்ரிவால் கட்சி வெற்றிபெற பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஒரே அறிவுரை

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறுவதற்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஒரே ஒரு முக்கிய அறிவுரையை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன.

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக முதல் மந்திரி ஆகிறார்.

இந்த தேர்தலில் பா.ஜனதா 8 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அந்த கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற அவருடன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இணைந்து பணியாற்றினார். தேர்தல் முடிவு முன்னணி நிலவரம் வெளிவரும் போதே பிரசாந்த் கிஷோர் வாக்காளர்களுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்தார். அந்த டுவிட்டர் பதிவில், “இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி” என்று தெரிவித்திருந்தார்.

நேற்று பிற்பகலில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு பிரசாந்த் கிஷோர் வருகை தந்தார். அங்கிருந்த கெஜ்ரிவாலுக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொண்டனர்.

டெல்லி சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் உதவியது, கெஜ்ரிவாலுக்காக பிரசார யுக்திகளையும் வகுத்து கொடுத்துள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட்ட போது ஒரே ஒரு அறிவுரை மட்டும் வழங்கி உள்ளார். அதாவது எதிர்க்கட்சிகளுடன் மோதல் மனப்பான்மையை கைவிட வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அறிவுறுத்தி உள்ளார். இந்த அறிவுரையே ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றியை தேடித்தந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் பிரதமர் மோடியை குறிவைத்து தாக்குவதை நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அப்போதுதான் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க நினைப்பவர்கள் கூட ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கும் மனநிலைக்கு மாறுவார்கள். மேலும் மக்களுக்கான முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுப்பவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் கெஜ்ரிவாலுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆலோசனையின்படி கெஜ்ரிவால் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்துவது, இலவச பஸ் பயணம் போன்ற திட்டங்களை அறிவித்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கெஜ்ரிவாலின் சாதனை விளக்க புத்தகம் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள 25 ஆயிரம் வீடுகளுக்கு வழங்கப்பட்டன. இதுபோன்ற செயல்களே ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளது.