செய்திகள்

லட்சத்தீவுகள் அருகே சரக்கு கப்பல் தீப்பிடித்து விபத்து- மாயமான 3 மாலுமிகள் மீட்பு

லட்சத்தீவுகள் அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் மாயமான 3 மாலுமிகள் இன்று மீட்கப்பட்டனர்.

திருவனந்தபுரம்:

மயர்ஸ்க் லைன் நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு கப்பலான மயர்ஸ்க் ஹோனம் கடந்த 1-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு எகிப்தின் சுவேஸ் நகருக்கு சென்றுகொண்டிருந்தது. இதில் 13 இந்தியர்கள் உள்பட 27 ஊழியர்கள் இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு லட்சத்தீவுகளுக்கு உட்பட்ட அகட்டி தீவில் இருந்து 340 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது, கப்பலில் உள்ள ஒரு கண்டெய்னரில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால் ஊழியர்கள், இந்திய கடலோர காவல்படையின் மீட்பு மையத்திற்கு தகவல் அளித்துவிட்டு அனைவரும் கடலில் குதித்தனர்.

அவர்களில் 23 பேரை இந்திய கடலோரப்படையினர் மீட்டனர். மாயமான 4 மாலுமிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. தீப்பிடித்த கப்பலை பாதுகாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாயமான மூன்று மாலுமிகளை இந்திய கடலோரப்படையினர் மீட்டனர். இவர்கள் திருவனந்தபுரத்திலிருந்து 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காணாமல் போன மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #tamilnews

SCROLL FOR NEXT