செய்திகள்

தமிழகத்தில் இனிமேல் நடிகர்கள் நாடாள முடியாது- தனியரசு எம்.எல்.ஏ.

தமிழகத்தில் நடிகர்கள் இனிமேல் நாடாள முடியாது என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

மாலை மலர்

கரூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது சட்ட விரோதமானது என தனியரசு எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் உ.தனியரசு எம். எல்.ஏ. கரூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது சட்டவிரோதமானது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு இந்திய அரசியல் சாசனத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும், இறையாண்மைக்கும் எதிரானது. சட்டத்திற்கு எதிரான மத்திய அரசை கலைத்து விடலாம்.

தமிழகத்தில் நடிகர்கள் இனிமேல் நாடாள முடியாது. ரஜினிகாந்த் தொடங்கிய மக்கள் மன்றத்தில் குறுகிய காலத்திலே திண்டுக்கல் மாவட்டத்தில் நிர்வாகிகள் நியமனத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது அரசியல் கடுமையானது என்பதை ரஜினிகாந்த் உணர்த்திருப்பார்.

புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய கமல்ஹாசன் முதல் சுற்று வந்து விட்டார். இனி 2,3-வது சுற்று அவர் வரப்போவதில்லை. வட மாநில கட்சிக்கு வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்த ரஜினி, எம்.ஜி.ஆர். ஆட்சி தருவதாக பச்சை பொய் சொல்கிறார். மக்கள் அவரை ஏற்கமாட்டார்கள்.

அ.தி.மு.க.வுடன் தற்போது எங்கள் கூட்டணி தொடர்கிறது. கூட்டுறவு சங்க தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்போம். அடுத்து வருகிற தேர்தலில் கூட்டணி நிலைப்பாடு பற்றி அப்போது தான் அறிவிக்கப்படும்.

அ.தி.மு.க.வில் அணிகள் ஒன்றாக இருப்பதுதான் பலம். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைந்தார். அதுபோல எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் டி.டி.வி. தினகரன் அணி இணையும். அதற்கான வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின் கரூரில் கொங்கு திருமண மண்டபம் அருகே உள்பட பல்வேறு இடங்களில் பேரவை கொடியை அவர் ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அருள்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews