செய்திகள்

ஜெயலலிதா வீட்டில் சோதனை: அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடந்துள்ளது- தனியரசு எம்.எல்.ஏ

ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடந்துள்ளது என்று தனியரசு எம்.எல்.ஏ நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மாலை மலர்

நெல்லை:

வ.உ.சி நினைவு நாளையொட்டி நெல்லையில் மணிமண்டபத்தில் வ.உ.சி சிலைக்கு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்தனர். பின்னர் தனியரசு எம்.எல்.ஏ நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் மிகப்பெரும் தலைவியாக ஒன்றரை கோடி தொண்டர்களை கட்சியில் சேர்த்த புகழ்பெற்ற ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியிருப்பது அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயலாகும். இந்த சோதனை நிறுத்தப்படவேண்டும். இது அனைவராலும் கண்டிக்கப்படவேண்டும். அவர் உயிரோடு இருந்தபோது அவரை சந்திக்க நேரம் கேட்ட மத்திய பா.ஜ.க ஆட்சியினர் அவர் இறந்தபிறகு இல்லத்தை சோதனையிட செய்தது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் ஆளும் அரசு இதுபோன்ற சம்பவங்களை தவிர்த்திருக்கவேண்டும். எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் போன்றோர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படும் விதமான செயலை தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்று ஈடுபடுவது நல்லதல்ல. மேலும் நள்ளிரவு சோதனை நடத்தியது தேவையற்றது.

நாங்கள் கலைஞரை சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் கிடையாது. அவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து உயர்ந்த இடத்துக்கு வந்தவர். உடல்நலம் குன்றிய நிலையில் அவரை சந்தித்து வாழ்த்துபெறவே சென்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.