ஆண்டிப்பட்டி,ஏப்.29-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஆண்டிப்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் கட்சியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரவேண்டும். ஏனெனில், ஓட்டுப்போட்ட மக்களுக்கு நாங்கள் நல்லது செய்ய வேண்டும். இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தால் நாங்கள் சட்டமன்றம் செல்வோம். பாதகமாக வந்தால், தேர்தலை சந்தித்து மக்களுக்கு நல்லது செய்வோம்.
அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நாங்கள் சபாநாயகரிடம் புகார் செய்தோம். இதுதொடர்பாக சபாநாயகரிடம் விளக்கம் கேட்டு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் விளக்கமளிக்க சபாநாயகர் வரவில்லை. சபாநாயகரை விளக்கம் கேட்டு அழைத்ததை கூட நீதிபதி தீர்ப்பில் கூறவில்லை.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது தான், நீதித்துறை மீது எங்களுக்கு சந்தேகம் வருகிறது. சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்ட குட்கா வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வாய்ப்பு இல்லை என்று, முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமன் கூறியிருக்கிறார்.
அப்படியென்றால் நான் சொல்வது சரிதானே? நீதித்துறையும் சரிவர செயல்படவில்லை. சி.பி.ஐ.யும் சரிவர செயல்படவில்லை என்றால் மக்கள் எங்குதான் செல்வார்கள்?.
மக்களின் கடைசி நம்பிக்கையே நீதித்துறை தான். அதிலும் மக்களுக்கு சந்தேகம் வந்தால், இந்த ஜனநாயக நாட்டில் மக்களால் எப்படி வாழமுடியும்?. தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசுக்கு எதிராக வாக்களித்தார்.
கட்சிதாவல் தடை சட்டத்தில் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?, நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் எதற்காக கட்சி தாவல் தடை சட்டம்? இந்த சட்டமே தேவையில்லையே? மத்திய அரசு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, எங்களுக்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடியை கொடுத்து வருகிறது.
மத்திய அரசின் ஆட்சி காலம் இன்னும் 9 மாதங்கள் தான் இருக்கிறது. அதன்பின்னர் மக்கள் தீர்ப்பு வழங்கும் நேரம் வரும். அப்போது மக்களின் ஆதரவு எங்களுக்கா? தற்போதைய மத்திய அரசுக்கா? என்று தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilSelvan #Gutkha