ஆண்டிப்பட்டி:
அ.தி.மு.க. அம்மா அணியும், புரட்சித்தலைவி அம்மா அணியும் தனித் தனியாக செயல்பட்டு வருகின்றன. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டி.டி.வி. தினகரனை கட்சியில் ஓரங்கட்டியதை தொடர்ந்து அந்த அணிகளுக்குள் மேலும் பிளவு ஏற்பட்டது.
நேற்று எடப்பாடி பழனிச்சாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சந்தித்து இணைப்பு குறித்து முக்கிய முடிவு வெளியிடப்போவதாக தகவல் பரவியது. ஆனால் இரவு வரை பரபரப்பாக காணப்பட்ட ஜெயலலிதா நினைவிடம் இணைப்பு இல்லை என்று தெரிந்ததும் அங்கிருந்த தொண்டர்கள் கலையத் தொடங்கினர்.
அணிகள் இணைப்பில் திடீர் விரிசல் ஏற்பட்டது குறித்து தினகரன் ஆதரவாளரான தங்கதமிழ் செல்வன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
இரு அணிகளிலும் யாருக்கு பதவியை அதிகமாக பகிர்வது என்று போட்டி நடக்கிறது. இதன் காரணமாகவே அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த 2 அணிகளும் இணைய வாய்ப்பு கிடையாது. ஏனெனில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையின் கீழ் உள்ள மனோஜ்பாண்டியன், முனுசாமி, மதுசூதனன் ஆகியோர் சுயமாக முடிவெடுத்து பேட்டி அளிக்கின்றனர்.
ஓ.பி.எஸ். பேச்சை அவர்கள் கேட்பதில்லை. கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் கூறியதைபோல மக்கள் பணியாற்றும் அரசாக எடப்பாடி அரசு செயல்பட்டால் ஆபத்து இருக்காது.
ஜெயலலிதா இறந்து குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பது நல்லதுதான். ஏனெனில் அப்போதுதான் நல்லது எது? கெட்டது எது? என்று மக்களுக்கு தெரியும். ஜெயலலிதா இல்லத்தை நினைவிடம் ஆக்குவதில் உள்ள சட்டசிக்கல்களை களைந்து அதன்பிறகு நினைவிடமாக்கலாம் என்று தெரிவித்தார்.