செய்திகள்

தினகரனை விமர்சிக்க அரி எம்.பி.க்கு எந்த தகுதியும் இல்லை: தங்கதமிழ்செல்வன்

டி.டி.வி. தினகரனை விமர்சிக்க அரி எம்.பி.க்கு எந்த தகுதியும் இல்லை என்று தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. கூறினார்.

மாலை மலர்

அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான தங்ததமிழ்செல்வன் எம்.எல்.ஏ. இன்று தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் விசாரணையில் உள்ளது. இதில் எங்களது அணி சார்பில் பொதுச்செயலாளர் சசிகலா எனவும், துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் என்றும் குறிப்பிட்டு ஆவணங்கள் தாக்கல் செய்து உள்ளோம்.

இந்த சூழ்நிலையில் அரி எம்.பி. ஒரு நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரன் கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று பேசி உள்ளார். இதனை சொல்வதற்கு அவருக்கு எந்த அருகதையும் கிடையாது.


சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்து கையெழுத்திட்டவர்களில் அரி எம்.பி.யும் ஒருவர் ஆவார். தற்போது ஏதோ ஒரு காரணத்திற்காக இவ்வாறு பேசுகிறார்.

இந்த பிரச்சனையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாயை திறந்து பேச வேண்டும். அவர் தனது வாயாலேயே பொதுச்செயலாளர் சசிகலா எனவும், துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் என்றும் கூற வேண்டும். இனியும் பேசாமல் மவுனமாக இருக்க கூடாது. ஏனெனில் அவர் கூறினால்தான் கட்சியின் மற்ற நிர்வாகிகளின் சர்ச்சையான பேச்சுக்களை நிறுத்த முடியும். அடுத்து வரும் 4 ஆண்டுகளிலும் அ.தி.மு.க. தனது நிறைவான ஆட்சியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம்