செய்திகள்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்க காலதாமதம் செய்வதில் நியாயமில்லை- தங்க தமிழ்செல்வன்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க கால தாமதம் செய்வதில் நியாயமில்லை என தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

ஆண்டிப்பட்டி அருகே தெப்பம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 101-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொள்வதற்காக தங்கதமிழ்செல்வன் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காலதாமதம் செய்கிறது. எனவே எங்களது துணை பொதுச்செயலாளர் தலைமையில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

மத்திய அரசின் மேல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியாவது மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக எம்.பி.க்கள் மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.

ஆட்சியை கவிழ்ப்பது நோக்கமல்ல. குரங்கணி தீ விபத்து பற்றி ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்கூட்டியே தெரிந்த நிலையிலும், தனது மகனுக்கான விழாவில் அவர் கலந்து கொண்டார். 20 பேரின் மரணத்திற்கு 4 அமைச்சர்களும் பதில் சொல்ல வேண்டும். சென்னையில், தேனியை சேர்ந்த போலீசார் 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அரசின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது.


தமிழுக்கு பாடுபட்ட, ஈழத் தமிழர்களுக்காக முள்ளிவாய்க்கால் முற்றம் கண்ட நடராஜனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவது தமிழ் மரபு. அதைக்கூட நடராஜனால் பலனடைந்த அமைச்சர்கள் செய்யவில்லை.

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் காலூன்ற முடியாது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க கால தாமதம் செய்வதில் நியாயமில்லை. இதனால் நாங்கள் பதவியில் இல்லாததால் எம்.எல்.ஏ. நிதி வீணாக உள்ளது.

SCROLL FOR NEXT