செய்திகள்

கமல், ரஜினிகாந்தால் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது: தங்க தமிழ்செல்வன் பேட்டி

மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்காத கமல், ரஜினிகாந்தால் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது என்று தங்க தமிழ்செல்வன் கூறினார். #kamal #rajinikanth #thangatamilselvan

மாலை மலர்

மேட்டுப்பாளையம்:

டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் ஊட்டி செல்லும் வழியில் மேட்டுபாளையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டி.டி.வி.தினகரன் தற்போது புதுக்கட்சி தொடங்குவதற்கான காரணம் அ.தி.மு.க. போட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தான். இந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்க 1 ஆண்டு ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை கூட ஆகலாம்.

தமிழகம் முழுவதும் பொதுவாக ஒரு சின்னம் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு புதுக்கட்சி தொடங்க வேண்டும் என்று நினைக்கின்றார். ஆர்.கே.நகர் இடைதேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க. வையும் இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றி விடலாம் என்று நினைக்கலாம். எங்களுக்கு பொது செயலாளர் சசிகலா தான். அவர் பக்கம் தான் நாங்கள் இருப்போம். அ.தி.மு.க. வில் தான் இருப்போம்.

ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அரசியல் பிரவேசம் பற்றி பேசாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய 2 நடிகர்கள் அவரின் மறைவிற்கு பின்னர் திடீரென பேசுகிறார்கள் என்றால் அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி முதல்-அமைச்சர் ஆகி விடலாம் என்று நினைகிறார்கள். அது வெறும் பகல் கனவாகத்தான் முடியும்.

கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிப்புகள் ,விவசாய பாதிப்புகள் குறித்தும் வாய் திறக்கவும் இல்லை. நேரடியாகச் சென்று சந்திக்கவும் இல்லை. இதே போல் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 10 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள் இது குறித்தும் அறிக்கை எதுவும் வெளியிடவும் இல்லை.

இவைகளை எல்லாம் மக்களிடம் எடுத்துச் சென்று போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரால் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது. எப்போதும் இறுதி எஜமானர்கள் மக்கள் தான். தேர்தல் வரும் போது அவர்கள் முடிவு செய்வார்கள். காலம் காலமாக ஹஜ் செல்கின்றவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. திடீரென ஒரு குழுவை அமைத்து மானியத்தை ரத்து செய்தது அதிகார உச்ச வரம்பு. தொடர்ந்து மானியத்தை வழங்க வேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. 

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #kamal #rajinikanth #thangatamilselvan