செய்திகள்

எடப்பாடி அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது: தங்கதமிழ்செல்வன்

அ.தி.மு.க. ஆட்சி டி.டி.வி. தினகரன் தலைமையில் தொடர்ந்து செயல்படும் எனவும் தற்போது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் தங்க தமிழ்செல்வன் கூறினார்.

மாலை மலர்

தேனி மாவட்டம் கூடலூரில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்.101 பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருண்குமார் தலைமைதாங்கினார். விவசாயஅணிசெயலாளர் கூடலூர் ராமர், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரசேகரன்,மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஸ்டார்ரபீக், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் நகர துணை செயலாளர் லட்சம் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், மருத்துவஅணி செயலாளர் டாக்டர் கதிர்காமு, மாநில ஜெயலலிதாபேரவை துணைசெயலாளர் முத்தையா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலிலதா தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிவாரியாக சென்று வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்பது வழக்கமாககொண்டு இருந்தார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது 30 -க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை ஒரே இடத்தில் வரவழைத்து பிரசாரம் செய்தார்.

தன்னுடைய உடல்நலம் குன்றிய நேரத்திலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டார். இந்த நிலையில் திடீரென உடல் நலகுறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிசிக்சை பெற்று நலமுடன் இருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார்.

இதனை அடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக தேர்வு செய்தோம். கட்சியின் பொதுசெயலாளராக சசிகலாவை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைத்தோம். இந்த நிலையில் கட்சியில் இருக்கும் சிலர் முதல்-அமைச்சராக சசிகலாதான்வரவேண்டும் என்று ஜெயலலிதா சமாதியில் தீர்மானம் போட்டார்கள்.

அதன் பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பின் பா.ஜ.கவினர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வத்தை ஒன்றாக இணைந்து தன்கையில் வைத்துவந்தனர்.

இதனை அடுத்து ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவித்தனர். கட்சி சின்னமானஇரட்டை இலையை வழங்கி அனைத்து பணிகளும் விரைவாக நடந்தது. இடைத்தேர்தலில் போட்டியிட டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்க மறுத்தனர்.

ஆனாலும் தொண்டர்கள் பலத்தோடுபொதுமக்கள் ஆதரவுடன் சுயேட்சையாக சின்னம் கொடுத்த 10 நாட்களில் சரித்திர சாதனை வெற்றி பெற்றுஇந்திய அரசியல் தலைவர்களை தன்பக்கம் பார்க்கவைத்தார். இதில் இருந்து தெரிகிறது தொண்டர்கள்யார் பக்கம் இருககிறார்கள் என்று.


தினகரனால் பதவி அடையவில்லை என்று சென்னையில் கூறிவரும் பன்னீர் செல்வம் தேனியில் வந்து இவ்வாறு கூறமுடியுமா? ஏன் என்றால் தேனியில் உள்ள கட்சியின் அடி மட்டதொண்டன் மற்றும் பொதுமக்களுக்கு நன்றாக தெரியும். யாரால் பதவிக்கு வந்தோம் என்று மற்றும் சில நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கிறார்கள். 90 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் டி.டி.வி.தினகரனுடன் இருக்கிறார்கள்,

தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். காரணம் கேட்டால் அரசு நிதி பற்றாக்குறையால் தவிக்கிறது. இதனால் போக்குவரத்து கழகம் பாதிப்பு அடைந்துவிட்டது என்று கூறி 80 சதவீத கட்டணத்தை உயர்த்தி விட்டனர். கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து ஒன்றும் தெரியாதது போல் எடப்பாடி பழனிசாமி நடந்து கொண்டு வருகிறார். உள்ளாட்சி தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க படுதோல்வி அடையும். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் பிப்ரவரி முதல் வாரத்தில் தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.

அதன் பிறகு அ.தி.மு.க. ஆட்சி டி.டி.வி. தினகரன் தலைமையில் தொடர்ந்து செயல்படும். தற்போது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது

இவ்வாறு அவர் பேசினார்.