சென்னை:
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் சட்டசபைக்குள் நுழையும் காலம் வரும் என்று தங்கதமிழ்ச்செல்வன் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டி.டி.வி.தினகரனை ஆதரிக்கிறோம் என்பதற்காக 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருப்பதை தவறு என்றே அனைத்து தரப்பினரும் கூறுகின்றனர். யாரும் அதை நியாயப்படுத்த மாட்டார்கள்.
கட்சி ரீதியாக பார்க்கும் போது நாங்களும் அ.தி.மு.க. வினர்தான். எங்களை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டியதில்லை.
இந்த ஆட்சிக்கு சோதனை வந்தபோது கடந்த பிப்ரவரி மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது இந்த ஆட்சிக்கு ஆதரவாக நாங்கள் வாக்களித்தோம்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன் உள்ளிட்ட 11 பேர் இந்த ஆட்சிக்கு எதிராகவும் கொறடா உத்தரவுக்கு எதிராகவும் வாக்களித்தனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக ஓ.பன்னீர்செல் வத்துக்கு துணை முதல்வர் பதவியும், பாண்டிய ராஜனுக்கு அமைச்சர் பதவியும் வழங்கி உள்ளனர். இவர்களுக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா?
இன்னும் சொல்லப்போனால் பொதுச்செயலாளர் சசிகலாவை முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும் என்று அம்மா நினைவிடத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மொட்டை அடித்து தீர்மானம் நிறைவேற்றினார். அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
நாங்கள் இந்த ஆட்சியை கலைக்க சொல்லவில்லை. முதல்-அமைச்சரைத்தான் மாற்ற சொன்னோம். இது தவறா?
கட்சிக்கு துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவி கொடுக்கிறார்கள். எங்களது எம்.எல்.ஏ. பதவியை பறிக்கிறார்கள். இது ஜனநாயக படுகொலை என்பது அப்பட்டமாக தெரிகிறது.
மதுரை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மனம் குமுறி தினகரனை கட்சியில் சேர்க்கும் நிலை வந்தால் முன்நின்று வரவேற்பேன் என்று கூறி உள்ளார். 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திருக்க கூடாது என்றும் அறிவித்துள்ளார்.
இதே மனநிலையில்தான் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
நாங்கள் நீதிமன்றம் மூலம் நிரபராதி என்று நிரூபிப்போம். எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தால் மன்னித்து மீண்டும் எம்.எல்.ஏ. பதவியை தர ஏற்பாடு செய்வதாக தொலைபேசியில் பேசி மிரட்டுகிறார்கள்.
நாங்கள் இப்போது கோர்ட்டுக்கு சென்று விட்டோம். கோர்ட்டில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும். 18 பேரும் மீண்டும் எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்கு நுழையும் காலம் விரைவில் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.