செய்திகள்

எடப்பாடி - ஓ.பி.எஸ். கொண்டுவந்துள்ள 4 தீர்மானமுமே எடுபடாது: தங்கத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ.

சென்னையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி - ஓ.பி.எஸ். கொண்டுவந்துள்ள 4 தீர்மானமுமே எடுபடாது என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்செல்வன் கூறினார்.

மாலை மலர்

சென்னையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 4 தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து புதுவையில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் நடந்த இன்றைய கூட்டத்தில் எம்.பி.எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று கூறியிருந்தார்கள். ஆனால் அந்த கூட்டத்தில் சம்பந்தமே இல்லாமல் யார் யாரோ முன்வரிசையில் அமர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. 4 தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

அதில் சசிகலா, தினகரனை ஒதுக்கி வைப்பது என்ற தீர்மானத்தை மனோஜ்பாண்டியன் முன்மொழிந்துள்ளார். அவர் கட்சியில் எந்த பதவியில் இருக்கிறார். அவர் தீர்மானம் கொண்டுவர முடியுமா? அப்படி கொண்டுவரும் தீர்மானம் செல்லுமா?

நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையையும், ஜெயா டி.வி.யையும் மீட்போம் என்று கூறியுள்ளனர். இந்த இரண்டுமே தனியார் சொத்து இதை எப்படி அவர்கள் மீட்க முடியும்?

சசிகலா-தினகரன் செய்யும் நியமனங்கள் செல்லாது என்று கூறுகிறார்கள். அப்படியானால் செங்கோட்டையனை அவைத்தலைவராகவும், சீனிவாசனை பொருளாளராகவும், சி.வி. சண்முகத்தை மாவட்ட செயலாளராகவும் சசிகலா நியமித்தார். இதுவும் செல்லாதா? இவர்கள் கொண்டுவந்துள்ள 4 தீர்மானமுமே எடுபடாது.

பொதுக்குழுவை கூட்டப்போவதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். பொதுக்குழுவை பொதுச்செயலாளர் தான் கூட்ட முடியும். அவர் ஜெயிலில் இருப்பதால் துணை பொதுச்செயலாளருக்குத்தான் தான் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் உள்ளது.

அவ்வாறு இல்லை என்றால் 4-ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து பொதுக்குழுவை கூட்டுவதற்கு உரிமை உள்ளது. என்ன காரணத்துக்காக பொதுக்குழுவை கூட்டுகிறோம் என்று கூறி அதன்படி கூட்டத்தை கூட்ட வேண்டும். அவர்களால் (எடப்பாடி அணியால்) பொதுக்குழுவை கூட்ட முடியாது.

இவ்வாறு தங்கத்தமிழ்செல்வன் கூறினார்.