செய்திகள்

பிரமாண பத்திரத்தை வாபஸ் வாங்கினால் நீதிமன்றம் செல்வோம்: தங்க.தமிழ்செல்வன்

தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள பிரமாண பத்திரத்தை வாபஸ் வாங்கினால் நீதிமன்றம் செல்வோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க.தமிழ்செல்வன் கூறினார்.

மாலை மலர்

புதுவை வின்ட் பிளவர் ரிசார்ட் ஓட்டலில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடந்த 8 நாட்களாக தங்கி உள்ளனர்.

புதுவையில் தங்கியுள்ள தங்க.தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள பிரமாண பத்திரங்களை எடப்பாடி-பன்னீர்செல்வம் அணியினர் வாபஸ் வாங்க போவதாக கூறப்படுகிறது.

நாங்களும் பிரமாண பத்திரம் கொடுத்துள்ளோம். அவர்களால் மட்டும் பிரமாண பத்திரத்தை வாபஸ் வாங்க முடியாது. அப்படி வாபஸ் வாங்கினால் அதனை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் செல்வோம்.

நேற்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத பெரும்பாலானோர் எங்கள் அணிக்கு வருவார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோரை நீக்கும் அதிகாரம் எடப்பாடி, பன்னீர்செல்வம் அணிக்கு இல்லை.

நாங்களும் பொதுக்குழு உறுப்பினர்கள்தான். எங்களுக்கு அழைப்பு கொடுத்தால் நாங்களும் பொதுக்குழுவில் கலந்து கொள்வோம். பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எங்கள் பக்கமே உள்ளனர்.

எனவே, பொதுக்குழுவை கூட்டி நீக்குவது என்பது முடியாது. முதல்-அமைச்சர் எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெற்று கவர்னரிடம் நாங்கள் கடிதம் கொடுத்து இருந்தோம்.

அதன் அடிப்படையில் கவர்னர் எங்களை அழைத்து பேசுவார் என காத்திருந்தோம். கவர்னர் எங்களை அழைக்க வில்லையெனில் எங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஓரிரு நாளில் டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம்.

இவ்வாறு தங்க.தமிழ் செல்வன் கூறினார்.