செய்திகள்

தினகரனை நீக்கும் எடப்பாடி அணி தீர்மானம் ஏமாற்று வேலை: தங்கதமிழ்செல்வன் பாய்ச்சல்

தினகரனை நீக்கும் எடப்பாடி அணி தீர்மானம் ஏமாற்று வேலை என்று தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. பேட்டியில் கூறியுள்ளார்.

மாலை மலர்

மேலூர்:

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. 3 அணிகளாக பிரிந்துள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் வருகிற 14-ந்தேதி டி.டி.வி. தினகரன் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடை பெறுகிறது. இதற்காக அழகர்கோவில் ரோட்டில் உள்ள திடலில் மேடை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பணிகளை தங்கதமிழ் செல்வன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் 26 பேரை கூட்டி தினகரனை நீக்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இது ஏமாற்று வேலை.

கட்சியில் உள்ள 122 எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர், நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோரிடம் எந்தவித கருத்தும் கேட்காமல் இந்த முடிவை எடப்பாடி அணியினர் எடுத்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில் பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் தினகரன் என்று குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளனர். தற்போது அதனை ஏற்க மறுப்பது ஏமாற்று வேலை ஆகும்.

பொதுச்செயலாளருக்கு மட்டுமே கட்சியில் இருந்து யாரையும் நீக்கவோ, சேர்க்கவோ அதிகாரம் உண்டு. தொடர்ந்து எடப்படி அணியினர் இதுபோன்ற முடிவுகளை எடுத்தால் அவர்களது பதவிகள் பறிபோகும்.

ஓ.பி.எஸ். அணியை அ.தி.மு.க.வுடன் சேர்க்க நினைப்பது மனவேதனை அளிக்கிறது. அ.தி.மு.க. அரசு ஊழல் அரசு. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் எனக்கூறி அரசுக்கு எதிராக அவர் போராடி வருகிறார். அவரை கட்சியில் சேர்க்க நினைப்பது ஏன்?

இவ்வாறு அவர் கூறினார்.