செய்திகள்

அன்புச்செழியன் ஓ.பன்னீர்செல்வத்துடன் விழாவில் கலந்து கொள்வதா?: தங்க தமிழ்செல்வன் ஆவேசம்

போலீசாரால் தேடப்படும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் விழாவில் கலந்து கொள்வதா? என தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாலை மலர்

கொடைக்கானல்:

டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான தங்கதமிழ்செல்வன் கொடைக்கானலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனை போலீசார் தேடி வருகின்றனர். அவர் மதுரையில் நடந்த செல்லூர் ராஜூ இல்ல விழாவில் கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகுலுக்கி பேசியுள்ளார்.

இது குற்றவாளிக்கு துணை போகும் செயலாகும். போலீசார் அவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.

122 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டுதான் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரானார். ஆனால் அதன் பிறகு எந்த தவறும் செய்யாத எங்களை பதவி நீக்கம் செய்தார். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகவே வரும். அதன் பிறகு நிலைமை மாறும். எங்களுக்கு பாதகமாக தீர்ப்பு வந்தாலும் நாங்கள் மேல் முறையீடு செய்ய மாட்டோம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். கட்சியில் உள்ள பெரும்பாலான தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். இது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி மூலமே நிரூபணம் ஆகியுள்ளது.

தி.மு.க.வுடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக முதல்வரும், துணை முதல்வரும் கூறி வருகின்றனர். அவர்கள் எங்களை எதிர்த்து போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர்கள். தி.மு.க.வை எப்போதோ மக்கள் புறக்கணித்து விட்டார்கள். வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக டி.டி.வி. தினகரன் தலைமையில் தனிக்கட்சி தொடங்கப்படும். இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றுவோம். எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உள்ளாட்சி தேர்தலில் கடுமையான தோல்வியை சந்திப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews