பேரணாம்பட்டு:
வேலூர் மேற்கு மாவட்டம், பேரணாம்பட்டு நகர அ.தி.மு.க. அம்மாஅணி சார்பில் அ.தி.மு.க. 46-வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நேற்று பேரணாம்பட்டு பஸ் நிலையத்தில் நடைபெற்றது. பேரணாம்பட்டு நகர செயலாளர் சிவா தலைமை தாங்கினார். குடியாத்தம் நகர செயலாளர் சேவல் நித்தியானந்தம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி பேசினர்.
கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசியதாவது:-
ஜெயலலிதா மருத்துவமனை செல்லும் முன் 1 வருடமாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தது எங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு தெரியும். ஆஸ்பத்திரியில் 17, 18, நாட்களில் முதல்வர் இலாகா பொறுப்புகள் அனைத்தும், ஓ.பி.எஸ். இடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜெயலலிதா இறந்த பின்னர் எல்லோரும் சேர்ந்து ஓ.பி.எஸ்சை முதல்வர் ஆக்கினோம். அதன் பின்னர் கட்சி பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்தோம்.
ஓ.பி.எஸ். ராஜினாமா செய்த பின்னர் சசிகலா எடப்பாடியை முதல்வராக தேர்ந்தெடுத்தார். தி.மு.க.வும் சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்குமாறு வலியுறுத்தியது. இந்த சூழ்நிலையில் சட்டசபை கூடியது. நாங்கள் ஒற்றுமையாக இருந்து எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தோம். இதற்கு காரணம் சசிகலாதான். ஆனால் துரோகிகள் ஒன்று சேர்ந்து கொண்டு பொதுசெயலாளர், துணை பொதுசெயலாளரை நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அவர்கள் கழக பொதுச் செயலாளர் உறவினர்களிடம் சென்று கெஞ்சி பதவி வாங்கினார்கள். இங்குள்ள அமைச்சர் வீரமணி, சசிகலா இல்லாமல் எம்.எல்.ஏ., மந்திரியாகி இருக்க முடியாது.
அதற்கு சிபாரிசுக்கு வந்தவரையே நேருக்கு நேர் இங்கேயே நிரூபிக்க முடியும், ஆட்சியை நீங்கள் நடத்துங்கள் கட்சியை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றுதான் சொன்னோம். எதிர்த்து ஓட்டு போட்ட 10 எம்.எல்.ஏக்கள் நீக்கப்படவில்லை. முதல்வரை மாற்ற கோரிய 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. கண்டிப்பாக நாங்கள் எம்.எல்.ஏ. ஆகிவிடுவோம் மீண்டும் கூட்டத்தை நடத்தி காட்டுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கட்சி தலைமை பேச்சாளர் செல்வம், மாநில மகளிரணி இணை செயலாளர் ஜெயந்தி பத்மநாபன், மாநில அமைப்பு செயலாளர் டாக்டர் வி.எஸ்.விஜய், மேற்கு மாவட்ட செயலாளர் ஆம்பூர் பாலசுப்பிரமணி, கிழக்கு மாவட்ட செயலாளர் சோளிங்கர் பார்த்திபன், மேற்கு மாவட்ட பொருளாளர் அப்புபால் பாலாஜி, வேலூர்அல்லாபுரம் பகுதி செயலாளர் சுதா என்ற சுதர்சன் மற்றும் குடியாத்தம், பேர்ணாம்பட்டு, ஆம்பூர் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.