செய்திகள்

தினகரன் புதிய கட்சி தொடங்கினால் ஆதரிப்போம்- தங்க தமிழ்செல்வன்

டி.டி.வி. தினகரன் புதிய கட்சி தொடங்கினால் ஆதரிப்போம் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். #TTVDinakaran

மாலை மலர்

சென்னை:

டி.டி.வி. தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் கிடைத்துள்ள நிலையில், புதிய கட்சி தொடங்குவது குறித்து சென்னையில் நேற்று முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் செந்தில் பாலாஜி, பழனியப்பன், ரெங்கசாமி உள்பட 7 முன்னாள் எம்.எல்.ஏக்கள் மட்டும் கலந்து கொண்டனர். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றி வேல் உள்பட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 எம்.எல்.ஏக்கள் பங்கேற்க வில்லை.

டி.டி.வி. தினகரன் தனிக் கட்சி தொடங்குவதால் கூட்டத்தை புறக்கணித்தீர்களா? என்று தங்க தமிழ் செல்வனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

நாங்குநேரில் பொதுக் கூட்ட நிகழ்ச்சி இருந்ததால் நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் நான் பங்கேற்க முடியவில்லை.

டி.டி.வி. தினகரன் தனிக் கட்சி ஆரம்பிப்பது தற்காலிக ஏற்படாக கோர்ட்டு உத்தரவின்படிதான் நடைபெறுகிறது.

அ.தி.மு.க.வையும் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பதுதான் எங்களது நோக்கமாகும். இது சம்பந்தமான வழக்கு கோர்ட் டில் நிலுவையில உள்ளது.

இடைக்கால ஏற்பாடாக தேர்தலில் போட்டியிடும் வசதிக்காக புதிதாக கட்சி பெயர், சின்னத்தை பயன்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி குக்கர் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அனைத்திந்திய அம்மா அண்ணா தி.மு.க., எம்.ஜி.ஆர். அம்மா தி.மு.க., எம்.ஜி.ஆர். அம்மா தி.க. ஆகிய 3 பெயரில் ஒரு பெயரை கட்சிக்கு தேர்ந்தெடுத்து தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்யலாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

கோர்ட்டு உத்தரவின் பேரில் தினகரன் புதிய பெயரில் கட்சி தொடங்குவதால் அதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களாக இருக்கும் நாங்கள் சேருவதால் எந்த பாதிப்பும் வராது. எங்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயாது.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran  #tamilnews