செய்திகள்

டி.டி.வி தினகரனை முதல்வராக முன்னிறுத்துவோம்: தங்க தமிழ்ச்செல்வன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு சாதகமாக வந்தால் தினகரனை முதல்வராக முன் நிறுத்துவோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #ThangaTamilSelvan #TTVDinakaran

மாலை மலர்

சென்னை:

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்ததால் அவர்கள் 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.

இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு விசாரணையும் முடிந்துள்ள நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அனேகமாக 8 அல்லது 10-ந்தேதிக்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச் செல்வனிடம் கேட்டபோது இதுபற்றி அவர் கூறியதாவது:-

சட்டசபைக்குள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் வரும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல் போய்விடும்.

தற்போது சட்டசபையில் அ.தி.மு.க.வுக்கு சபாநாயகரையும் சேர்த்து 115 எம். எல்.ஏ.க்கள் ஆதரவுதான் உள்ளது. தி.மு.க.வுக்கு-89, காங்கிரசுக்கு-8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1, டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேர் உள்ளனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளே வரும் பட்சத்தில் முதல்- அமைச்ச ர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அப்போது நாங்கள் எடப்பாடி பழனிசாமி -ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கண்டிப்பாக ஆதரவு கொடுக்க மாட்டோம். இவர்கள் மட்டுமல்ல, அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, வீரமணி இல்லாமல் வந்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்போம். அப்போது முதல்- அமைச்சராக தினகரனை முன்னிறுத்துவோம்.

18 எம்.எல். ஏ.க்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் தொகுதியில் நாங்கள் இடைத்தேர்தலை சந்திப்போம்.

ஆளும் கட்சியில் இருந்து ஆட்சியை காப்பாற்ற எங்களுடன் சமரச பேச்சு நடப்பதாக வரும் தகவல்கள் உண்மையல்ல. எங்களுடன் யாரும் சமரசம் பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் இப்போது பதவியில் இருக்கும் பல பேர் சசிகலா ஆட்களால் நியமிக்கப்பட்டவர்கள்தான். எம்.எல்.ஏ.க்களை பொறுத்த வரை யாரும் ஆட்சியை இழக்க தயாராக இல்லை.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தாலும் ஆட்சி கவிழ வாய்ப்பில்லை. ஆட்சிக்காக சமரசம் ஆகி விடுவார்கள்.

அப்போது முதல்- அமைச்சர் யார்? என்பது மட்டும்தான் பிரச் சினையாக இருக்கும். அதையும் பேசி சமரசமாகி விடுவார்கள். எனவே யாரும் ஆட்சியை இழக்க விரும்ப மாட்டார்கள்.

சசிகலா தரப்பு ஆட்கள் தான் இப்போதும் ஆட்சியை நடத்துகிறார்கள். தினகரனை சிலர் வெறுக்கிறார்கள். அவ்வளவுதான்.

கட்சியை பொறுத்த அளவில் இப்போது பதவியில் உள்ள பலர் ராவணன், கலியமூர்த்தி, ராமச்சந்திரன், மிடாஸ் மோகன், நடராஜன், பழனிவேலு என சசிகலாவின் ஆட்கள் மூலம்தான் பதவி பெற்று நீடிக்கிறார்கள்.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்கள் யாரும் இன்னும் புதிதாக நியமனம் செய்யப்பட வில்லை. புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த பிறகுதான் கட்சியில் யார் ஆட்கள் அதிகம் என்பது தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilSelvan #TTVDinakaran #tamilnews