செய்திகள்

எங்களை நீக்கி விட்டு அழைப்பு விடுப்பது ஏன்?: எடப்பாடி அணிக்கு தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி

எங்களை நீக்கி விட்டு ஏன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அழைக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி அணிக்கு தங்க தமிழ்ச்செல்வன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மாலை மலர்

சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரன் இல்லத்தில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் அவரவர் சொந்த பந்தங்களின் விசே ஷங்களுக்காக வெளியில் சென்றுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் யாரும் அடைத்து வைக்கப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாகவே உள்ளனர்.

10 எம்.எல்.ஏக்களும் சொந்த தொகுதி நிகழ்ச்சிகளுக்கு சென்று இன்று வந்திருக்கிறார்கள். இன்று எங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 25 பேராக உயர்ந்துள்ளனர். இன்னும் கூடுதலாக எங்கள் பக்கம் வருவார்கள்.

எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை மட்டும் கூட்டவில்லை. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் கூட்டுகிறார். ஒரு முதல்-அமைச்சர் ஏன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுவது ஏன்? என்று தெரியவில்லை.

கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும். ஆனால் அவர்கள் புதுமையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுகிறார்கள்.

எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்படுவதாக எங்கள் 21 பேருக்கும் அழைப்பு வந்தது. கடந்த முறை நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு எங்களை ஏன் அழைக்கவில்லை என்று கேட்டபோது அது தெரியாமல் நடந்துவிட்டது. எனவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்றார்கள்.


தமிழ்நாட்டின் முதல்- அமைச்சரை மாற்றி புதிய முதல்-அமைச்சரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் நாங்கள் 21 பேரும் ஒற்றுமையாக இருக்கிறோம். அந்த நிலைப்பாடு எங்களுக்கு வர வேண்டும். அப்படி வந்தால் தான் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்.

எங்கள் கோரிக்கை நிறைவேறாததால் நாங்கள் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை. எங்கள் அணிக்கு வரும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மாணவி அனிதா இறுதிச் சடங்கில் எங்களது துணைப் பொதுச்செயலாளர் கலந்து கொண்டார். நீட் என்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அதில் வெற்றி பெற்றால் தான் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்பது நல்ல கோட்பாடு. நீட் தேர்வில் அந்தந்த மாநிலத்துக்கு உட்பட்ட பாடப்பிரிவில் கேள்வி கேட்டால் நல்லது. அப்படி செய்தால் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் எம்.பி.பி.எஸ், படிக்கக்கூடிய நிலை ஏற்படும் என்ற ஒரு நல்ல கருத்தை எங்கள் துணைப் பொதுச்செயலாளர் கூறியுள்ளார். அதற்கான முயற்சியை நாங்கள் எடுப்போம். அனிதா இறுதிச்சடங்குக்கு முதல்- அமைச்சர் செல்லவில்லை. இறுதிச்சடங்கு நடைபெறும் போது துணை முதல்- அமைச்சர் குருப்பெயர்ச்சிக்காக சாமி கும்பிட சென்று விட்டார்.

பொறுப்புக்கு வருவதற்கு துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சலை வைத்து அரசு நிர்வாகத்தை நடத்த வேண்டும். அதுபோல் இப்போது இல்லை. அந்த நிலைப்பாடு வர நாங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும்.

இன்னும் 2 நாளில் கவர்னர் எங்களை அழைப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அவர் அழைக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை கூடிப் பேசி ஆராய்ந்து ஒரு நல்ல முடிவுக்கு வருவோம்.

நீங்கள் அரசை எதிர்ப்பதால் உங்களை தகுதி நீக்கம் செய்வோம் என்று கொறடா எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அப்படி இருக்கும் போது எங்களை ஏன் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அழைத்தீர்கள்.

நாங்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களா அல்லது வேறு கட்சி எம்.எல்.ஏ.க்களா என்ற உண்மை எங்களுக்கு தெரிந்தாக வேண்டும். எங்களை நீக்கி விட்டு ஏன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அழைக்கிறார்கள். அவர்கள் அழைத்தததால் நாங்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்பது உறுதியாகி விட்டது.

அவர்களின் நிலைப்பாடு தவறு. ஒவ்வொரு கால கட்டத்திலும் என்ன பேசுகிறார்கள். என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதே அவர்களுக்கு தெரியவில்லை. அது கேலிக்கூத்தாக இருக்கிறது. இதை மக்கள் விரும்பவில்லை.

சுயலாபத்துக்காகத்தான் இரு அணிகளும் ஒன்றாகியுள்ளன. நாட்டு நலனுக்காக அவர்கள் ஒன்று சேரவில்லை என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். அந்த கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

நாங்கள் சொல்பவர் முதல்வராக வந்தால், அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்தால் இந்த அரசு மக்கள் நல அரசாக மாறும். மக்களுக்கு வேண்டிய திட்டங்கள் போய்ச் சேரும்.