மதுரை:
மதுரையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை பேசியதாவது:-
அ.தி.மு.க. தொண்டர்களை ஆளாக்கிய பெருமை எம்.ஜி.ஆரையே சாரும். அவரது வழியில் அ.தி.மு.க.வை வளர்த்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா தனது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா நடத்த ஆசைப்பட்டார்.
ஆனால் அவர் விரும்பிய படி அ.தி.மு.க. ஆட்சி அமைந்தும் நூற்றாண்டு விழா கொண்டாட அவர் உயிரோடு இல்லை. அவருடைய கனவை நனவாக்க வேண்டிய பொறுப்பு அ.தி.மு.க.வினருக்கு உள்ளது.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை காத்தவர் ஜெயலலிதா. ஆகவே இரட்டை இலையை காப்பது நமது கடமை. எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை எதிர்த்து போராட வேண்டும். லட்சியத்தை நோக்கிய பயணத்தில் இடையூறுகள் வரலாம். ஆனால் நாம் பாதை மாறாமல் சென்று வெற்றி பெறுவதே முக்கியம்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வுக்கு சோதனை வந்துள்ளது. நண்பர்களாக இருந்த அ.தி.மு.க.வினர் பிரிந்து இருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் பேசுகையில், எம்.ஜி.ஆர். சினிமாவிலும், அரசியலிலும் திருப்புமுனையை ஏற்படுத்தினார். சமுதாய புரட்சிக்கும் வித்திட்டார். அ.தி.மு.க. தொடங்கிய சிறிது காலத்திலேயே ஆட்சி பொறுப்பையும் ஏற்று மிக பெரிய சாதனையை நிகழ்த்தினார். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் ஒரே மாதிரியான அணுகுமுறையை கொண்டிருந்தார்.
முதல்-அமைச்சராக இருந்தாலும் தேசிய ஒருமை பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் முன்னுரிமை கொடுத்தார். அதே வழியில் ஆட்சி நடத்தியவர் ஜெயலலிதா. தற்போது அவரது வழிகாட்டுதலில் தமிழக அரசு செயலாற்றி வருகிறது என்றார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், மனித புனிதராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் அ.தி.மு.க.வை வழி நடத்தி சாதாரண தொண்டனுக்கும் பதவி வழங்கி அழகுபார்த்தவர் ஜெயலலிதா.
தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வினர் ஒருதாய் பிள்ளைகளாக ஒன்றுபடுவது அவசியம். அதிகார பதவியைவிட நமக்கு அ.தி.மு.க.தான் முக்கியம். ஆட்சி அதிகாரத்தை எப்போது வேண்டுமானாலும் நாம் அணியலாம். கட்சியை காப்பாற்றினாலே அதிகாரத்தை பெறமுடியும்.
அ.தி.மு.க.வை வீழ்த்த சிலர் தயாராக உள்ளனர். அதற்கு நாம் இடம்தரக்கூடாது. எனவே எதிரிகளை வீழ்த்தி கட்சியையும், ஆட்சியையும் காக்க சபதம் ஏற்போம் என்றார்.
அமைச்சர் ஆர்.பி.உதய குமார் பேசுகையில், அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் லட்சிய கனவை நனவாக்க தமது வாழ்வை தியாகம் செய்தவர் ஜெயலலிதா. அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்த ஆசைபட்ட ஜெயலலிதாவின் கனவை முதல்வர் எடப்பாடி பழனி சாமி நிறைவேற்றி உள்ளார் என்றார்.
விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கே.ஏ.செங்கோட்டையன், ராஜேந்திரபாலாஜி, டாக்டர் மணிகண்டன், கடம்பூர் ராஜூ, எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, ஏ.கே.போஸ், தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.