கரூர்:
தமிழக அரசு சார்பில் மாவட்டந்தோறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி கரூர் திருமாநிலையூர் மைதானத்தில்எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழாவுக்கான அரங்கம், பந்தல் கால்கோள் விழா இன்று காலை நடந்தது. விழாவுக்கு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். கலெக்டர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பித்துரை, அமைச்சர்கள் தங்கமணி, கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவை நடத்தி வைத்தனர்.
விழாவின் போது பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரை நிருபர்களிடம் கூறும்போது, மற்ற மாவட்டங்களை காட்டிலும், ஏன் நாமக்கல்லை காட்டிலும் கரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தை காப்பாற்றவும், மறைந்த ஜெயலலிதா தந்த ஆட்சியை காப்பாற்றவும், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி சிறப்பாக நடைபெறவும் உறுதி ஏற்போம். அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என்றார்.