செய்திகள்

பணப்பட்டுவாடா: அ.திமு.க. மீது வீண்பழி- தம்பிதுரை பேட்டி

பணப்பட்டுவாடா தொடர்பான விவகாரத்தில் அ.திமு.க. மீது வீண்பழி சுமத்துகின்றனர் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தேர்தல் அரிகாரியை சந்தித்த பின் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெரும். எங்கள் கட்சி நிர்வாகிகளை தாக்குவதுடன் பணப்பட்டுவாடா செய்வதாக தவறான தகவலை கூறுகின்றனர். அராஜக செயல்களில் ஈடுபடுகின்றனர்.

1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் எங்கள் வேட்பாளர் மதுசூதனன் வெற்றி பெறுவார் என்பதால் எதிர்க்கட்சியினர் சில பிரச்சினைகளை உருவாக்குகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் கூறி இருக்கிறோம்.

இந்த தேர்தலில் அனைவருக்கும் பாதுகாப்பு தந்து மக்கள் அச்சமின்றி வாக்களிக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். இதற்காக கூடுதலாக துணை ராணுவம், போலீசாரை நிறுத்த வேண்டும்.

ஆர்.கே.நகர் தொகுதி அம்மா வெற்றி பெற்ற தொகுதி. புரட்சி தலைவர், புரட்சி தலைவி ஆகியோரின் வெற்றி சின்னமான இரட்டை இலையும் எங்களுக்கு கிடைத்து உள்ளதால் நாங்கள் மாபெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

ஆளுங்கட்சியான எங்கள் மீது எதிர்க்கட்சியினர் வீண் பழி சுமத்துகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி பயம் வந்து விட்டதால் பணப்பட்டுவாடா என்று எதையாவது கூறுகின்றனர். அதை ஊடகங்களிலும் தெரிவிக்கின்றனர்.

இது எதிர்க்கட்சி செய்யும் திட்டமிட்ட சதி. எதிர்க் கட்சியில் சிலர் அ.தி.மு.க.வின் கரை வேட்டியை கட்டிக் கொண்டு அராஜகங்களை செய்து விட்டு எங்கள் மீது பழிபோடுகின்றனர். தேர்தல் ஆணையம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

நாங்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும். இது அம்மாவின் தொகுதி. தொடர்ச்சியாக அ.தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதி.

தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் எதிர்க்கட்சிகள் தோல்வி பயம் காரணமாக மக்களை திசை திருப்ப பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இந்த தேர்தல் நடக்கத்தான் போகிறது. இதில் எந்தவித குறைபாடு இல்லை. தேர்தல் நியாயமாக நடக்கிறது. எனவே எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனில் வலியுறுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.