செய்திகள்

தளி அருகே வி‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

தளி அருகே வி‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே உள்ள லட்சுமி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 45). இவருடைய மனைவி மாரம்மா(35).

இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். பல இடங்களுக்கு சென்று சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் குணமடையவில்லை என தெரிகிறது.

இதனால் விரக்தி அடைந்த மாரம்மா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடிய பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து குடித்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அங்கு மாரம்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தளி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.