செய்திகள்

பயங்கரவாதிகள் ரசாயன தாக்குதல் நடத்த சதி: சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சோதனை

ரசாயன தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதால் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை:

ஆஸ்திரேலியாவில் விமானத்தில் ரசாயன தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் தீட்டிய சதி திட்டம் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது.

இதேபோல் இந்தியாவில் விமானம், ரெயில்களில் ரசாயன தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கும் பொருட்கள் மூலம் கொடிய நச்சுவாயுக்களை உருவாக்குவதே ரசாயன தாக்குதல் ஆகும்.

விமானம், மெட்ரோ ரெயில் போன்ற மூடப்பட்ட கதவுகளை கொண்ட வாகனங்களில் இந்த நச்சு வாயுக்கள் பரவினால் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

எனவே விமானம், ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தி பயங்கர வாதிகளின் ஊடுருவலை முறியடிக்க வேண்டும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகளை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், மாம்பலம் ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.