ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் நகர போலீஸ் நிலையத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி முஸ்டாக் அகமது சோபான் என்பவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக தங்களது பாதுகாப்பில் வைத்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் போலீசின் பிடியில் இருந்து அவர் தப்ப முயன்றார். சோபானை தப்பிக்க வைக்க முன்கூட்டியே சதித்திட்டம் தீட்டிய சில தீவிரவாதிகள் போலீசின் கவனத்தை திசை திருப்ப வெளியில் இருந்து கையெறி குண்டு ஒன்றை வீசினர். ஆனால் இலக்கு தவறிய அந்த குண்டு தீவிரவாதி சோபான் அருகே விழுந்து வெடித்து சிதறியது. இதில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மெஹ்ராஜூதின் என்ற போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கையெறி வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச்சென்ற தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.