செய்திகள்

பயங்கரவாதிகளின் பிரதான இலக்கு ஸ்ரீநகர் விமான நிலையம்தான்: உளவுத்துறை தகவல்

ஸ்ரீநகர் விமான நிலையம் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் பிரதான இலக்காக இருந்து உள்ளது என உளவுத்துறை தகவல்கள் தெரிவித்து உள்ளது.

மாலை மலர்

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சர்வதேச விமான நிலையம் அருகே ஹூம்கமா பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படையின் முகாம் மீது நேற்று பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் பிகே யாதவ் வீர மரணம் அடைந்தார். 3 பேர் காயம் அடைந்தனர்.

இதற்கிடையே தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே எல்லையை கடந்து காஷ்மீருக்குள் உளவு பார்த்து தாக்குதல் நடத்தி உள்ளனர் என கூறப்படுகிறது.

நேற்று ஸ்ரீநகர் எல்லைப் பாதுகாப்பு படை முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் உண்மையான இலக்கு ஸ்ரீநகர் விமான நிலையமாகும் என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெய்ஷ்-இ-முகமதுவின் அப்சல் குரு படை அப்பகுதியை முன்னதாகவே உளவு பார்த்து உள்ளனர் என உயர்மட்ட உளவுத்துறை தகவல்கள் தெரிவித்து உள்ளன.

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் விமான நிலையம் மிகவும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இந்த விமான நிலையம் சிஆர்பிஎப் படை வீரர்களால் பாதுகாக்கப்படுகிறது. விமான நிலையத்தில் தொழில்நுட்ப பகுதி மற்றும் பிற பகுதிகள் எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

“ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்க ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த அப்பகுதியில் உளவு பார்த்து உள்ளனர். பாதுகாப்பு வளையத்தை உடைத்து விமான நிலையம் அருகே கூட செல்ல முடியாது என புரிந்துக் கொண்ட பின்னர் எல்லைப் பாதுகாப்பு படை முகாமை தேர்வு செய்து உள்ளனர்,” என உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.