செய்திகள்

சிக்கிம் எல்லையில் பதற்றம்: சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயார் நிலையில் இந்திய ராணுவம்

சிக்கிம் எல்லையில் சீனாவின் நெருக்கடிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டோக்லாம் பகுதியில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் அங்கு நிரந்தரமாக தங்கும் வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாலை மலர்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 3,488 கிலோ மீட்டர் தொலைவுக்கு எல்லைப் பகுதி அமைந்துள்ளது. இந்த எல்லையில் சுமார் 220 கி.மீ. தூர எல்லைப்பகுதி சிக்கிம் மாநிலத்தில் இருக்கிறது.

சிக்கிம் மாநில எல்லை அருகே இந்தியா, பூடான், சீனா ஆகிய மூன்று நாடுகள் சந்திக்கும் முச்சந்தி உள்ளது. அந்த பகுதியை டோகாலா என்று இந்தியாவும், டோகாலாம் என்று பூடானும், டோங்லாங் என்று சீனாவும் பெயரிட்டு அழைத்து வருகின்றன.

இந்த முச்சந்தியில் 60 சதவீத பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டிலும் சுமார் 30 சதவீத பகுதி பூடான் கட்டுப்பாட்டிலும் உள்ளன. பூடான் ராணுவம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் இந்தியாவை சார்ந்து இருப்பதால், தனது 30 சதவீத பகுதியை பாதுகாக்கும் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

இதனால் அந்த முச்சந்தியில் இந்தியா அதிக கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது. அந்த பகுதியை கைப்பற்றி விட்டால் அடுத்த சில நிமிடங்களுக்குள், சீனாவால் இந்தியாவுக்குள் நுழைந்து வடகிழக்கு பகுதியையே முழுமையாக துண்டித்துவிட முடியும் என்ற அபாயம் இருப்பதால் இந்தியா அதை தீவிரமாக தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. தற்போது அந்த முச்சந்தியில்தான் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே பதட்டமும், சர்ச்சையும் உருவாகி உள்ளது.

கடந்த மாதம் அந்த முச்சந்தி பகுதி அருகே சீனா ராணுவ வீரர்கள் நடமாட்டம் அதிகரித்தது. திடீரென அவர்கள் அங்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தியாவின் முக்கிய பகுதியை நோக்கி அந்த சாலை அமைந்ததால் உஷாரான இந்திய ராணுவம் கடந்த மாதம் 19-ந்தேதி சீனாவின் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தியது.

அப்போது இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து சீனா அந்த பகுதியில் தனது ராணுவத்தை குவித்தது. பதிலுக்கு இந்தியாவும் ராணுவத்தை குவித்தது.

இந்திய வீரர்களும், சீன வீரர்களும் அருகருகே நேருக்கு நேர் அணி வகுத்ததால், அந்த பகுதியில் கடும் பதட்டம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போர் மூளும் அபாயமும் உருவானது. என்றாலும் அந்த பகுதியில் இருந்து இரு நாட்டு வீரர்களும் விலக்கப்படவில்லை.

சிக்கிம் எல்லை அருகே உள்ள சர்ச்சைக்குரிய அந்த முச்சந்தி பகுதியை நீண்ட நாட்களாக சீனா தனக்குரியது என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. தனது நிலப்பகுதியில் இருந்து இந்தியா ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என்று தினமும் சீனா கூறியபடி உள்ளது. ஆனால் இந்தியா எதையும் கண்டுகொள்ளவில்லை.

சிக்கிம் மாநில எல்லை அருகே உள்ள நிலப்பரப்பின் ராணுவ முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள இந்தியா, அங்கிருந்து தனது ராணுவ வீரர்களை விலக்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. அதுபோல சீனாவும் அங்கிருந்து பின்வாங்கக் கூடாது என்ற முடிவில் இருக்கிறது. இந்தியா, சீனா இரு நாடுகளுமே அந்த சந்திப்பை கவுரவப் பிரச்சினை போல பார்க்கின்றன.

இந்த நிலையில் டோங் லாங் எல்லை பிரச்சினையில் இந்தியாவின் எந்த சமரசத்தையும் ஏற்க மாட்டோம் என்று நேற்று முன்தினம் சீனா அறிவித்தது. பிரச்சினை தொடங்கி ஒரு மாதமான பிறகும் சீனா இவ்வாறு அறிவித்துள்ளதால் அது எதற்கும் தயார் என்பது போல நடந்து கொள்கிறது.

சீனாவின் இத்தகைய நெருக்கடிகளுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை கடந்த இரு தினங்களாக இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது. டோக்லாம் பகுதியில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் அங்கு நிரந்தரமாக தங்கும் வகையில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இரவு-பகலாக 24 மணி நேரமும் டோக்லாம் பகுதியில் தங்கி இருப்பதற்கு வசதியாக அந்த கூடாரங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் அந்த கூடாரங்களில் உள்ள வீரர்களுக்கு இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து உணவு மற்றும் ராணுவ தளவாடங்கள் எடுத்துச் செல்வதற்கான நேரடி இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவை தவிர டோக்லாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் இருந்து சீன வீரர்களின் ஒவ்வொரு அசைவையும் மிக, மிக எளிதாக கண்காணிக்கும் வசதியையும் இந்திய வீரர்கள் செய்துள்ளனர். இதன் மூலம் சீனாவின் எத்தகைய மிரட்டலுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தயாராக இருப்பது தெரியவந்துள்ளது.

சீனாவின் நெருக்கடி எந்த அளவில் வந்தாலும் எதிர்கொள்ள தயார் என்பதை சூசகமாக உணர்த்தும் வகையில் அந்த கூடாரங்கள் அமைந்துள்ளன. மேலும் எத்தனை நாட்கள் ஆனாலும் நீண்ட காலம் அங்கு தொடர்ந்து தங்கி இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு இந்தியா-சீனா இடையே இத்தகைய நெருக்கடி உருவானபோது தூதரக அளவில் பேசி சமரசம் செய்யப்பட்டன. இந்த தடவையும் அப்படி சமரச தீர்வு காண முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஆனால் சீனாவின் பிடிவாதம் காரணமாக இதுவரை சமரசம் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்தே எதையும் எதிர்கொள்ள தயார் என்ற ரீதியில் இந்திய ராணுவம் கூடாரங்கள் அமைத்து நிரந்தரமாக தங்கும் பதிலடியை கையில் எடுத்துள்ளது.