சென்னை:
தென்காசி பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு டெண்டர் மற்றும் மறு டெண்டர் வெளியிட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 5 என்ஜினீயர்களை இடைக்கால பணி நீக்கம் செய்து தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஏ.கார்த்திக் உத்தரவிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை பொது இயக்குனருக்கு, ஏ.கார்த்திக் எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் மற்றும் மறு டெண்டர் விவகாரத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக தென்காசி கோட்ட பொறியாளர் எம்.சுந்தர்சிங், தென்காசி முதன்மை உதவி கோட்ட பொறியாளர் ஐ.பிரபாகரன், தென்காசி வடக்கு உதவி பொறியாளர் டி.செல்வன், சங்கரன்கோவில் உதவி கோட்ட பொறியாளர் சி.மெர்லின் கிரிஸ்டல், சங்கரன்கோவில் மேற்கு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி பொறியாளர் கே.வைரமுத்து ஆகியோர் 5 பொறியாளர்கள் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இருந்தாலும் கோட்டம் மற்றும் துணைக்கோட்டத்தில் உள்ள எந்த ஒரு பணியும் இதன் மூலம் பாதிக்காத வகையில் தேவையான பொறுப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.