செய்திகள்

பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொன்ற 10 பேர் கைது: உதவி சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

ஒடிசா மாநிலத்தில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்துக் கொன்றது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடமை தவறிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் தோமுஹனி கிராமத்திற்கு சென்ற பெண்ணை, குழந்தை கடத்தும் பெண் என்ற சந்தேகத்தின்பேரில் பிடித்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர். நேற்று தப்பிக்க முயன்ற அவரை, கற்களை வீசி தாக்கியும், கம்பால் தாக்கியும் சித்ரவதை செய்துள்ளனர். இதில், அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது, இறந்துபோன அந்தப் பெண் மயூர்பஞ்ச் மாவட்டம் அன்லா கிராமத்தைச் சேர்ந்த பசந்தி மொகந்தா (48) என்பது தெரியவந்தது. மேலும், அவர் பாரிபடா நகரின் கலிகாபூர் பகுதியில் வசிக்கும் தனது மகளை பார்க்க சென்றுள்ளார். அங்கிருந்து சென்றவரை ஜூன் 1-ம் தேதி முதல் காணவில்லை. இதுபற்றி காவல் நிலையத்தில் அவரது மகள் புகார் அளித்துள்ளார். தோமுஹனி கிராமத்திற்கு சென்றபோது, குழந்தை கடத்தும் பெண் என நினைத்து அடித்து கொன்றது விசாரணையில் தெரியவந்திருப்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும், இந்த கொலை தொடர்பாக இதுவரை 10 பேரை கைது செய்திருப்பதாகவும், மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

இதற்கிடையே, கடமையை சரியாக செய்யாத உதவி சப்-இன்ஸ்பெக்டர் சாத்துவா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT