செய்திகள்

நடிகர் மோகன் பாபுவுக்கு தமிழ்நாட்டில் கவுரவ டாக்டர் பட்டம்

தமிழ்நாட்டில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

தெலுங்குப்பட கதாநாயகர்கள் வரிசையில் முன்னர் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய நடிகர் மோகன் பாபு 500-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மத்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ உள்பட பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுள்ள இவர், ஆந்திர மாநிலத்தின் பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதுடன் அரசியல் பிரமுகராகவும் உள்ளார்.

மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் உருவாக்கிய தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பாராளுமன்ற எம்.பி.யாகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

வசன உச்சரிப்பில் தனக்கென்று தனிபாணியை உருவாக்கிய மோகன் பாபுவின் பிரபலமான வசனங்கள் புத்தக வடிவில் தொகுக்கப்பட்டு, பிரிட்டன் நாட்டு பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. பிரிட்டன் பாராளுமன்றத்தால் கடந்த ஆண்டு கவுரவிக்கப்பட்ட முதல் தெலுங்கு நடிகர் என்ற சிறப்பிடத்தை பெற்ற நடிகர் மோகன் பாபுவுக்கு தமிழ்நாட்டில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

சென்னையில் இன்று நடைபெற்ற டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 26-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில்  தமிழக (தற்காலிக) ஆளுநர் வித்யாசாகர் ராவ் நடிகர் மோகன் பாபுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வாழ்த்தினார்.

தெலுங்கு திரைப்பட உலகில் தனது வசன உச்சரிப்பால் புதிய மாற்றத்துக்கு வழிவகுத்தமைக்காக அவருக்கு இந்த பட்டம் வழங்கப்படுவதாக வாழ்த்துரை ஆற்றிய வித்யாசாகர் ராவ் குறிப்பிட்டார்.