ஐதராபாத்:
கோவில்களில் அர்ச்சகர்களாக பணியாற்றும் பிராமண வகுப்பை சேர்ந்தவர்களை திருமணம் செய்ய பெண்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு வருமானம் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தெலுங்கானா மாநில பிராமண நலவாரிய தலைவரும், முதல்-மந்திரியின் ஆலோசகருமான ரமணாச்சாரி கூறியதாவது:-
கை நிறைய சம்பாதிக்கும் ஆண்களையே பெண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். கோவில் அர்ச்சகர்களுக்கு ஊதியம் குறைவாக கிடைப்பதால் அவர்களை திருமணம் செய்து கொள்ள பெண்கள் தயங்குகிறார்கள். இதனால் அர்ச்சகர்களுக்கு திருமணம் ஆவதில் தாமதம் ஏற்படுகிறது. பலர் திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்காக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகர ராவ், ‘கல்யாண மஸ்து’ என்ற திட்டத்தை அமல்படுத்த உள்ளார்.
இதன்படி பிராமண வகுப்பை சேர்ந்த கோவில் அர்ச்சகர்களை திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு திருமணத்துக்கு முன்பே செலவுக்காக ரூ.1 லட்சம் வழங்கப்படும். திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதி பெயரில் அரசு வங்கியில் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்யப்படும். இந்த பணத்தை அவர்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு வட்டியுடன் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த திட்டம் வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.