ஐதராபாத்:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக தேசிய அளவில் புதிய அணி ஒன்றை உருவாக்க தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் திட்டமிட்டு உள்ளார். இது தொடர்பாக ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த முயற்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முன்னாள் முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன், ஐதராபாத் எம்.பி.யும், அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சியின் தலைவருமான ஒவைசி மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இரு எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, உற்சாகம் அடைந்துள்ள சந்திரசேகர ராவ், புதிய அணியை தொடங்குவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் தீவிர ஆலோசனைகளை மேற்கொள்ள இருக்கிறார்.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். (வெளியுறவுத்துறை) மற்றும் ஐ.ஆர்.எஸ். (வருவாய்த்துறை) அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த இருக்கிறார். அரசின் நிர்வாகத்தில் பல்வேறு மட்டங்களில் பணியாற்றி அவர்கள் பெற்ற ஏராளமான அனுபவங்கள் மற்றும் அவர்களுடைய கருத்துகளை அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்று சந்திரசேகர ராவ் கருதுகிறார்.
பொருளாதார நிபுணர்கள், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், சட்டநிபுணர்கள், மத்திய அரசின் நிதித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் அகில இந்திய விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தொழில் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிற்சங்களைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த ஆலோசனை கூட்டங்கள் ஐதராபாத்திலும், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களிலும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 27-ம் தேதி தனது கட்சியின் தொடக்க நாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளார். அதே நாளில் காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத கட்சிகளின் தலைவர்களை ஒன்று திரட்டி மூன்றாவது அணிக்கு பிள்ளையார் சுழி போடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
எனினும், ஆந்திராவில் ஆட்சியில் உள்ள தெலுங்கு தேசம், சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், திமுக ஆகிய கட்சிகள் தங்களது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் எழுவதை சீர்குலைக்கும் முயற்சியாக இது இருக்கும் எனவும் கருத்துகள் வெளியாகியுள்ளது. #ThirdFront #TelanganaCM #TamilNews