ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் கொத்தகொடா கிராமத்தைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவன் சந்துரு நாயக்.
இந்த சிறுவனை அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான வம்சி கிருஷ்ணா என்பவர் சில நாட்களுக்கு முன்பு கடத்திச் சென்றார். வழக்கமாக கடத்தல்காரர்கள் பெற்றோருக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டுவதுதான் வழக்கம். ஆனால் ஆட்டோ டிரைவர் வம்சி கிருஷ்ணா புதுமாதிரியான நிபந்தனை விடுத்தார்.
வம்சி கிருஷ்ணா சிறுவன் சந்துரு நாயக்கின் அத்தையை காதலித்து வந்தார். இதை அறிந்த காதலியின் குடும்பத்தினர் வம்சியை கடுமையாக தாக்கி மிரட்டினார்கள். காதலியை சந்தித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வம்சி காதலியின் குடும்பத்தை பழிவாங்க சிறுவனை கடத்திச் சென்றார்.
சிறுவனின் தாய் விபத்தில் சிக்கி காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக பள்ளி நிர்வாகத்திடம் பொய் சொல்லி அழைத்துச் சென்று இருக்கிறார்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் பஸ்நிலையத்துக்கு அழைத்துச் சென்று பின்னர் ரெயிலில் கடத்திச் சென்றார். அங்கிருந்து சிறுவனின் பெற்றோருக்கு போன் செய்தார். சிறுவனை விடுவிக்க வேண்டுமானால் காதலியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
இதுபற்றி பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஆட்டோ டிரைவரின் செல்போனை வைத்து இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். கடைசியாக புனே ரெயில் நிலையத்தில் சிறுவனுடன் இருப்பது தெரியவந்தது. உடனே தெலுங்கானா போலீசார் விரைந்து சென்று புனே போலீசார் ஒத்துழைப்புடன் சிறுவனை மீட்டு ஆட்டோ டிரைவரை கைது செய்தனர். #Tamilnews