செய்திகள்

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் நிதிஷ்குமாருக்கு தொடர்பு - தேஜஸ்வி குற்றச்சாட்டு

பேஸ்புக் பயனர்கள் தகவல்களை சட்டவிரோதமாக பயன்படுத்திய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு தொடர்புள்ளது என ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

பாட்னா:

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் மீதான நம்பத்தன்மை குறைந்து அதன் மதிப்பு சரிய ஆரம்பித்துள்ளது. 

இந்தியாவில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் பேஸ்புக் உள்ளிட்ட எந்த சமூக வலைத்தளம் ஈடுபட்டாலும் அரசு சகித்துக்கொள்ளாது என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு தொடர்புள்ளது என ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், பீகாரில் ஐக்கிய ஜனதா தளமும் பா.ஜ.க.வும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. நிதிஷ்குமாரின் கட்சி தலைவரான கே.சி.தியாகியின் மகன் அமரேஷ் தியாகி கேம்பிரிட்ஜ் அனாலிடிகா கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவர்கள் மூலமாக ஆட்சியை பிடித்துள்ளனர். எனவே, பிரதமர் மோடியும், முதல் மந்திரி நிதிஷ்குமாரும் இந்த விஷயத்தில் உரிய பதிலளிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT