செய்திகள்

தேஜாஸ் விமான ஏவுகணை தாக்குதல் சோதனை வெற்றி

தேஜாஸ் போர் விமானம் பறந்து கொண்டிருந்த விண்ணில் ஏவுகணை செலுத்தப்பட்டது. விண்ணில் ஏற்கனவே பறக்க விடப்பட்டிருந்த சிறு விமானத்தை அந்த ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

மாலை மலர்

சண்டிப்பூர்:

இந்திய ராணுவத்துக்காக “தேஜாஸ்” எனும் அதிநவீன குட்டி விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

முக்கோண இறக்கை வடிவமைப்பை கொண்ட இந்த போர் விமானம் மிகவும் குறைவான எடை கொண்டது. முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான இந்த ரக விமானங்கள் கடந்த 2007-ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஒற்றை இருக்கைக் கொண்ட இந்த நவீன போர் விமானம் ரேடார், லேசர் வழிகாட்டுதல் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளையும் கொண்டது. 13 மீட்டர் நீளம் கொண்ட இந்த விமானத்தில் இருந்து ஏவுகணைகளை செலுத்தும் திறனும் உள்ளது.

தேஜாஸ் போர் விமானத்தில் செயல்பாடுகளை விமானப் படையினர் அடிக்கடி சோதித்து வருகிறார்கள். நேற்றும் ஒடிசா மாநிலம் சண்டிப்பூர் கடற்கரையில் அத்தகைய சோதனை நடத்தப்பட்டது.

தேஜாஸ் போர் விமானம் பறந்து கொண்டிருந்த விண்ணில் ஏவுகணை செலுத்தப்பட்டது. விண்ணில் ஏற்கனவே பறக்க விடப்பட்டிருந்த சிறு விமானத்தை அந்த ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

நவீன சென்சார் கருவிகள் உதவியுடன் இந்த தாக்குதல் சோதனை நடந்தது. இந்த சோதனை வெற்றி இந்திய விமான படையின் முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

விண்ணில் எந்த சிறு வடிவில் ஆபத்து வந்தாலும் தேஜாஸ் மூலம் அதை எதிர் கொள்ள முடியும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தேஜாஸ் விமானம், எதிரி விமானங்களின் பின் சென்று ஏவுகணைகளை செலுத்தி அழிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2025-ம் ஆண்டுக்குள் இந்திய விமானப்படையில் அதிக அளவு தேஜாஸ் விமானங்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.