திருக்கனூர்:
காட்டேரிக்குப்பம் அருகே சந்தை புதுக்குப்பம் ஒத்தவாடை வீதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் பரத் என்ற பரதி (வயது 24). இவர் சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் அந்த பகுதியில் பெண்கள் குளிப்பதை மறைவிடத்தில் நின்று பார்த்து ரசிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார். இதுபற்றி பலமுறை கண்டித்தும் இந்த பழக்கத்தை பரத் கைவிட வில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று சந்தை புதுக்குப்பம் கிராமத்தில் 23 வயது இளம்பெண் தனது வீட்டில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது பரத் அந்த வீட்டின் பக்கத்தில் புது வீடு கட்டுமான பணி மேற்கொண்டு இருந்த இடத்தின் வழியாக சென்று அந்த பெண் குளிப்பதை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தார். இதனை கவனித்து விட்ட அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே பரத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அந்த பெண்ணின் தாய் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து பரத்தை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.