செய்திகள்

வேலை போய்விடுமோ என பயந்து தற்கொலை செய்து கொண்ட ஐ.டி ஊழியர்

ஐ.டி துறையில் தொடர்ந்து வேலையிழப்புகள் நிகழ்வதால் தனக்கும் அது போன்ற நிலை ஏற்படுமோ? என பயந்து ஐ.டி ஊழியர் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை:

ஐ.டி துறையில் தொடர்ந்து வேலையிழப்புகள் நிகழ்வதால் தனக்கும் அது போன்ற நிலை ஏற்படுமோ? என பயந்து ஐ.டி ஊழியர் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறையில் சமீப காலமாக வேலையிழப்புகள் அதிகளவில் நிகழ்ந்து வருகிறது. முன்னணி நிறுவனங்கள் கொத்துக் கொத்தாக ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர். இதனால், வேலையை நம்பி எதிர்கால கனவுகளுடன் இருந்தவர்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோபிகிருஷ்ணா துர்கபிரசாத் (25) என்ற வாலிபர் டெல்லி, ஐதராபாத் ஆகிய இடங்களில் பணியாற்றி விட்டு தற்போது மராட்டியம் மாநிலம் புனேவில் உள்ள முன்னணி ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். ஐ.டி வாழ்க்கையில் தனது எதிர்காலம் குறித்து பயம் ஏற்பட்டதால் மனமுடைந்து தான் தங்கியுள்ள ஓட்டலின் நான்காவது மாடியிலிருந்து குதித்து கோபிகிருஷ்ணா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த அவரது உடல் பிரேத பரிசோதனை செய்த பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்கொலைக்கு முன்னதாக குறிப்பு ஒன்றை கோபிகிருஷ்ணா தனது அறையில் எழுதி வைத்துள்ளார். அதில், ”ஐ.டி வேலையில் பாதுகாப்பு இல்லை. எனது குடும்பத்தை நினைத்து எனக்கு பயமாக உள்ளது. எனது குடும்பத்தை பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தை நினைத்து எனக்கு பயமாக உள்ளது. நாம் (ஐ.டி ஊழியர்கள்) வலுவாக இல்லை” என எழுதப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.