செய்திகள்

கோடை விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: துணைவேந்தர் எஸ்.தங்கசாமி

சுயநிதி பி.எட். கல்லூரிகளில் கோடை கால விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று கல்வியியல் ஆசிரியர் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தங்கசாமி தெரிவித்தார்.

மாலை மலர்

சென்னை:

சுயநிதி பி.எட். கல்லூரிகளில் கோடை கால விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று கல்வியியல் ஆசிரியர் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தங்கசாமி தெரிவித்தார்.

இது குறித்து தமிழ்நாடு கல்வியியல் ஆசிரியர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.தங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 7 அரசு கல்வி யியல் கல்லூரிகள் (பி.எட். கல்லூரிகள்), 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும், 680 சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. தகுதியான ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு பணியாற்றுகிறார்கள். சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறைந்த பட்சம் 2 வருடம் பணிபுரிய கல்லூரி நிர்வாகம் வாய்ப்பளிக்க வேண்டும். ஆசிரியர்கள் இடையில் நின்றுவிட்டாலோ, அல்லது கல்லூரி நிர்வாகம் அந்த ஆசிரியர்களை நீக்கிவிட்டாலோ மாணவ- மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும்.

தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் விதிமுறைப்படி ஆசிரியர்களுக்கான சம்பளம் மின்னணு பணபரிவர்த்தனை முறை மூலமாகத்தான் வழங்கவேண்டும். ஆசிரியர்கள் கண்டிப்பாக குறைந்தபட்சம் ஒரு வருடம் முழுவதும் கல்வியியல் கல்லூரியில் பணியாற்றவேண்டும். அவ்வாறு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை சம்பளம் கொடுக்க வேண்டியது இருக்கிறது என்று கருதி கோடை விடுமுறைக்கு முன்பாக ஆசிரியர்களை கல்லூரி நிர்வாகம் நீக்கி விடுவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

எனவே கண்டிப்பாக சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை குறைந்த பட்சம் ஒருவருடம் அல்லது 2 வருடம் பணியாற்ற கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவேண்டும். அவ்வாறு செய்தால் தான் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்காது.

மேலும் ஆசிரியர்களை கோடை காலத்திற்கு முன்பு பணிநீக்கம் செய்யக்கூடாது. கண்டிப்பாக அந்த ஆசிரியர்களுக்கு கோடை கால சம்பளம் வழங்கவேண்டும். அந்த ஆசிரியர்களை பங்களிப்பு ஓய்வூதியத்தில் சேர்க்கவேண்டும்.

இவ்வாறு துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.தங்கசாமி தெரிவித்தார்.