கணவர் கார்த்திகேயனுடன் கிருத்திகா 
செய்திகள்

வீட்டில் சுகப்பிரசவத்திற்கு முயன்ற ஆசிரியை பலி - கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

‘யூடியூப்’ வீடியோவை பார்த்து வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததால் ஆசிரியை உயிரிழந்த சம்பவத்தையடுத்து அவரது கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #SocialNetwork #homebirthattempt

மாலை மலர்

சமுக வலைதளங்களால் கிடைக்கும் நன்மைகளை போல தீமைகளும் உள்ளன.

இன்றைய இளைய சமுதாயத்தினர் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் என சமுக வலைதளங்களில் மூழ்கி கிடந்து வாழ்க்கையை வீணாக்குவதாக குற்றச்சாட்டு உள்ளது.

சமுக வலை தளங்களில் தவறான தகவல்கள் வேகமாக பரவி சமூகத்தில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்திய சம்பவங்கள் பல நடந்துள்ளன. இதன் உச்சமாக திருப்பூரில் ‘யூ-டியூப்’பில் வீடியோ பார்த்து வீட்டில் வைத்து நடத்திய பிரசவம் இளம்பெண்ணின் உயிரை பறித்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

திருப்பூர் காங்கயம் ரோடு புதுப்பாளையம் அருகே உள்ள ரத்தினகிரீஸ்வரர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). பனியன் வர்த்தக நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கிருத்திகா (28). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இவர்களுக்கு டிமானி என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கிருத்திகா, 2-வது முறையாக கர்ப்பமானார். கிருத்திகா சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க விரும்பினார். இதற்காக கிருத்திகா ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர்களிடம் ஆலோசனை பெறாமல் இருந்து வந்தார். மேலும் சுகப் பிரசவத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளத்தில் உள்ள தகவல்படி ஒவ்வொரு மாதமும் உணவு உட்கொண்டு வந்தார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் கிருத்திகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை 3.3 கிலோ எடை இருந்தது. ஆனால் கிருத்திகாவின் உடலில் இருந்து நஞ்சு வெளியேறாமல் அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் அவர் மயக்கம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் கிருத்திகாவையும், குழந்தையையும் ஆம்புலன்சில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கிருத்திகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கிருத்திகாவை தகனம் செய்ய மின் மயானத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் சான்றிதழ் இல்லாமல் தகனம் செய்ய முடியாது என்று அறிவித்ததால் கிருத்திகாவின் தந்தை சுப்பிரமணி நல்லூர் போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இல்லை என்று கூறியதையடுத்து 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கிருத்திகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

கிருத்திகா பெற்றெடுத்த பெண் குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது. இந்த குழந்தை ஆஸ்பத்திரியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, வீட்டில் வைத்து நடத்திய பிரசவம் பெண்ணின் உயிரை பறித்த தகவல் சுகாதாரத்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாநகராட்சி நகர்நல அதிகாரி பூபதி திருப்பூர் ரூரல் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவம் பார்க்கும் வசதி இருந்தும் கார்த்திகேயன் வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்தது எதற்காக? என்று விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.