செய்திகள்

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியருக்கு அடி-உதை: மாணவனின் உறவினர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு

வேலூர் அருகே பிளஸ்-1 மாணவன் தற்கொலை சம்பவத்தில் பள்ளி ஆசிரியரை அடித்து உதைத்த மாணவனின் உறவினர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

வேலூர்:

வேலூர் அருகே உள்ள பொய்கை சத்தியமங்கலம் புது காலனியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் அருண் பிரசாத் (வயது 16). பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்துவந்தார். கடந்த 3-ந் தேதி மாணவன் அருண்பிரசாத் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தற்கொலைக்கு முன்பாக மாணவன் எழுதியதாக கடிதம் ஒன்று பெற்றோருக்கு கிடைத்தது. அதில் ஆசிரியர்கள் பெயரை குறிப்பிட்டு தற்கொலைக்கு அவர்கள் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து மாணவன் உறவினர்கள் ஏராளமானோர் பள்ளியை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது, அங்கிருந்த முதுநிலை ஆசிரியர் கண்ணப்பனை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தனர். இந்த தாக்குதலில் ஆசிரியர் நிலை குலைந்து மயங்கி விழுந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, ஆசிரியரை தாக்கிய மாணவன் உறவினர்களான கோவிந்தசாமி, ரஜினி என்கிற போஸ், முத்தமிழ்வாணன், குமார், ரகு ஆகிய 5 பேர் மீது விரிஞ்சிபுரம் போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.